Thursday, September 4, 2008

காட்சி பிழைதானோ ?


அலுவலகத்தின் பொருளற்ற சொல் மழையில் இருந்து தப்பி. இயற்கையின் மெல்லிய தூரலில் நனைந்தவனாகப் பேருந்து நிலையத்தை நோக்கி ஆட்டோவில் விரைந்தேன். தூறல் நின்றபாடில்லை ஆனால் பேருந்து நிலையம் வந்துவிட்டது. வீட்டுக்கு வாங்கிய பொருட்கள் நனைந்து விடாமல் பேருந்தில் ஏற்றிவிட்டு என் இருக்கையில் போய் சாய்ந்தேன். வண்டியை எடுக்கப் போகும் சமயத்தில் ஒரு பெண்மணி வேகமாக ஏறினார். பெண்களுக்கு அருகில் அவருக்கு இருக்கை ஒதுக்காமல் ஆண்களுக்கு அருகில் இருக்கை ஒதுக்கி இருந்தார்கள்.அந்த அம்மணி போட்ட சண்டையில் பேருந்து புறப்பட தாமதம் ஆனது. எனக்கோ எப்போடா ஊருக்குப் போய்ச் சேருவோம் எல்லாரையும் பார்ப்போம் என்று இருந்தது .ஒருவழியாக இங்கிருப்பவரை அங்கு மாற்றி அங்கிருப்பவரை இங்கு மாற்றி அமரவைத்து பிரச்னை முடிக்கப்பட்டது. பேருந்து மெல்ல ஊர்தி வெள்ளத்தில் ஊர்ந்து சென்றது. இடை இடையே வழி மறிக்கும் சிக்னலில் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டு நகர்ந்து ஓசூர் எல்லையைத் தொட்டுவிட்டது. அப்பாடா எந்தவித சேதாரமும் இல்லாமல் தமிழக எல்லையைத் தொட்டுவிட்டோம் என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் உறக்கம் கண்ணைக் கவ்வியது. அருகில் இருப்பவரின் குறட்டைத் தொந்தரவு இல்லாமல் ஆழ்ந்த உறக்கம். அதிகாலை பகலவனின் ஒளிக் கீற்று உடலில் மென்மையான சூட்டைப் பரப்பி எழுமின் என்றது . மெதுவாக கண்ணைக் கசக்கி விழித்து பார்வையை சாலையின் இருபக்கத்திலும் மேயவிட்டேன். வழக்கமான பொட்டல் காடு ஒன்று இரண்டு தூறல் விழுந்ததற்கான சுவடுகள் ஆங்காங்கே தென்பட்டன. ஊர் எல்லையில் செம்புடன் காலைக் கடனைக் கழிக்க மக்கள் சென்றுகொண்டிருந்தனர். நெல்லைச் சீமையைப் பேருந்து தொட்டது. மழை கொஞ்சம் மண்ணை நனைத்து ஊரெங்கும் மண்வாசனையை பரப்பி இருந்தது. வாசனையை நுகர்ந்தவனாக பேருந்தில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறினேன். தாமிரபரணி ஆற்றைக் கடக்கும் போது கண்ணோடு சேர்ந்து மனதும் குளிர்ந்தது. ஆனால் தாமிரபரணியை கங்கைகொண்டானில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதால் தண்ணிருக்காக மண்ணின் மைந்தன் லோல்படுவதை நினைக்கையில் மனக் குளிர்ச்சி வலியாக மாறியது. நெல்லை மாறி கொண்டிருக்கிறது பெரும்பாலான கடைகளில் தமிழ் பெயர்ப் பலகைகள் மறைந்து ஆங்கில பெயர்ப் பலகைகளாகிக் கொண்டிருக்கிறது. வயல்கள் எல்லாம் மிகப்பெரிய கட்டிடங்களாகிக் கொண்டிருக்கிறது. குளிக்கும் வாய்க்கால்கள் எல்லாம் கழிவுநீர் வடிகால்களாக மாறிக் கொண்டிருக்கிறது. கால ஓடத்தின் வேகத்தில் ஈடு கொடுக்க முடியாமல் நாம் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு எழுத்தையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் .

நம்முடைய ஆறுகளைத் தொலைக்காமல்
நம்முடைய வயல்களைத் தொலைக்காமல்
நம்முடைய மொழியைத் தொலைக்காமல்
நாம் முன்னேறவே முடியாதா. நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக மம்மியாகவும் டாடியாகவும் மாறித்தான் ஆக வேண்டு்மா. என்ற வேதனை மிகுந்த கேள்விகளுடன் என் வீட்டை அடைந்தேன் .

4 comments:

ஜியா said...

ungaludaiya ella postsum padichen.. romba arumaiyaa ezuthareenga... neraiya vaasippeenga pola :))

anganga spelling mistakes neraya irukkuthu... one or two times, oru proof read pannittu athukappuram podunga :))

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

எனக்கு கவனக்குறைவு அதிகம். எழுத்துப் பிழைகள் என் கண்களை விட்டு தப்பி விடுகின்றன. சரி செய்து விடுகிறேன்

Divya said...

\நம்முடைய ஆறுகளைத் தொலைக்காமல்
நம்முடைய வயல்களைத் தொலைக்காமல்
நம்முடைய மொழியைத் தொலைக்காமல்
நாம் முன்னேறவே முடியாதா. நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக மம்மியாகவும் டாடியாகவும் மாறித்தான் ஆக வேண்டு்மா. என்ற வேதனை மிகுந்த கேள்விகளுடன் என் வீட்டை அடைந்தேன் .\\

உங்களின் ஆதங்கம் நியாயமானது ஹாரிஸ்!!

சிறு சிறு paragraph ஆக எழுதினால் படிப்பதற்கு இன்னும் இண்ட்ரெஸ்டிங்காக இருக்கும்னு தோனுது,
தப்பா இருந்தா மன்னிக்கவும்.

உங்கள் எழுத்து நடை எளிமையாக, அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள்!!

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. அவ்வாறே முயற்சிக்கிறேன்