
என் இனிய தமிழ் மக்களே,
சமஷ்கிருத மற்றும் ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து தமிழ்ச் சொல்லை பயன்படுத்த முயல வேண்டும். நான் ஹிந்தி மொழி பேசுபவர்கள் மற்றும் மலையாளிகளோடு பணிப்புரிகிறேன் அவர்கள் தெளிவாக பிறமொழி சொற்களைக் கலக்காமல் பேசுகிறார்கள். என்னோடு தமிழர்களும் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தமிழா என்று சந்தேகம் வருகிற அளவுக்கு பிறமொழி சொற்களை பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் தமிழை அறவே பேசுவதே இல்லை. உலகமயமாக்கலில் இவ்வாறு தமிழ் பேசிக்கொண்டிருந்தால் பிழைக்க முடியுமா? என்கிறார்கள். தாய்மொழி சோறு போடுமா, காசு கொடுக்குமா என்றெல்லாம் கேட்கும் ஒரே இனம் நாமாகத்தான் இருக்க முடியும். ஏன் தமிழர்களிடைய தமிழ்பற்று குறைந்துக்கொண்டே செல்கிறது என்று புரியவில்லை. ஒரு இனத்தின் அடையாளம் அதன் மொழிதான் அது அழிந்துவிட்டால் அந்த இனம் இருந்த அடையாளம் இல்லாமல் போய்விடும். பிறகென்ன BBCகாரன் வந்து ஒரு கூச்சை வைத்து இங்குதான் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் என்ற மொழியை பேசிய தமிழினம் என்ற ஒரு இனம் இருந்தது என்று நம்முடைய சந்ததிகளுக்கு படம் எடுப்பான். தமிழ் எத்தனையோ எதிரிகளை சந்தித்து வந்துள்ளது அனைவரும் வேறு மொழியை சார்ந்தவர்கள். தற்கால தமிழின் எதிரிகளோ அதன் பிள்ளைகள். எங்குப்போய் இதை சொல்லி அழுவது! இந்த வேதனையை மாற்ற தமிழின் மீது பற்று கொண்ட நம்மைப் போன்றவர்கள் முயல வேண்டும். நல்ல தமிழில் பேசவேண்டும், மற்றவர்கள் தமிழில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும். மற்ற மொழிகளை கலக்காமல் தமிழிலேயே பேச முயற்சிக்கவேண்டும். என் முதல் முயற்சியாக சில தமிழ்சொற்களும் அதற்கு நிகரான பிறமொழி சொற்களையும் தருகிறேன். இதில் எதாவது பிழைகள் இருந்தால் தயவுசெய்து திருத்தவும்.
ஜாஸ்தி – அதிகம்
கம்மி – குறைவு
கஷ்டம் – சிரமம்
சந்தோஷம் – மகிழ்ச்சி
தயார் – ஆயத்தம்
சாதம் – சோறு
நிஜம் – உண்மை
தினமும் – நாள்தோறும்
super - அருமை, பிரமாதம், அசத்தல்
இஷ்டம் - விருப்பம்
வாபஸ் – திரும்ப
மாமுல் - வழக்கம்
தயவு செய்து அன்றாட வாழ்க்கையில் நாம் பயன் படுத்தும் மேற்கண்ட தமிழ்ச் சொற்களை நீங்கள் பயன்படுத்துவது மட்டும்மல்லாது உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் பயன்படுத்த சொல்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் அழியாமல் காக்க முயற்சிப்போம். இது போல உங்களுக்கும் பல புதிய தமிழ்ச் சொற்கள் தெரிந்திருந்தால் அதையும் குறிப்பிடுங்கள்.