Monday, December 29, 2008

மண்ணறை ஓட்டம்










என்னுடைய ஒவ்வொரு நாளும்
மடித்து என் சவப்பெட்டிக்குள்
வைக்கப்படுகிறது !

அவைகள் எல்லாம் என்னுடைய
மண்ணறைக்குள்
வைக்கப்படுகிறன !

என்னுடைய பாதகங்கள்
கனவுகள் விருப்பங்கள் என்ற
மேடுபள்ளங்களை தாண்டி
என் மண்ணறையை நோக்கி
ஓடிக்கொண்டிருக்கிறது !

Wednesday, December 24, 2008

ஏன் இந்த சிறுவன் அழுகிறான்


அதி காலை சரியாக 6 மணி. மென்மையான குளிர் கற்று வீசிக்கொண்டிருந்தது வாப்பா டே பள்ளிக்கு( மத்றசா) நேரம் ஆச்சு எழும்புடா என்று ஒரு தாய் தன் 4 ஆம் வகுப்பு படிக்கும் மகனை எழுப்பி கொண்டிருந்தார். மிகுந்த சோம்பலுடன் கூடவே இரண்டு திட்டுகளையும் வாங்கிகொண்டு ,தன் தாயின் உதவியுடன் காலை கடமைகளை எல்லாம் முடித்து விட்டு, அடுபாங்கரையில் இருத்த தேத்தண்ணியை ( டி ) குடித்து விட்டு, மெதுவாக தர்ஹாவில் உள்ள பள்ளியை நோக்கி நடையை கட்டினான். ஹஜரத் கண்ணில் படாமல் பதுங்கி போய் மறைவாக அமர்ந்தான். ஒவ்வொருவராக சென்று ஹஜரத்திடம் பாடம் கொடுத்தனர். அந்த சிறுவனின் முறை வந்தது. இன்றைக்கு சரியா பாடம் சொல்லலைனா பிச்சுருவேன் பிச்சி என்று ஒரு அதட்டல். அதிலேயே அந்த சிறுவன் பார்த்துவைத்த பாடம் எல்லாம் மறந்து போனது. பேந்த பேந்த முழித்தான் வழக்கம் போல அடியை வாங்கிகொண்டு அழுதுகொண்டே விட்டுக்கு திரும்பினான்.
அம்மா அவித்துவைத்த இடியாப்பத்தை அரக பரக ஊட்டினர் , முயலுக்கு சாப்பாடு போட்டாச்சா என்று இடை இடையே கேட்டுக் கொண்டிருந்தான் அந்த சிறுவன். அதை எல்லாம் நாங்க பார்த்துக்குற்றோம் நீ ஒழுங்கா பள்ளிகூடத்துக்குப் போ என்று ஒரு அதட்டல். முஞ்சியை உர் என்று வைத்துகொண்டு வழியில் செல்லும் ஆட்டுகுட்டிகளுடன் விளையாடிக்கொண்டு பள்ளிநோக்கி நடந்தான். அன்று திங்கள் கிழமை பள்ளியில் அச்செம்ப்லி நடப்பதற்கான ஆயத்தம் நடத்து கொண்டிருந்தது. தலைமை ஆசிரியை வந்து பள்ளியின் அருமை பெருமைகளை பற்றி பேருரை ஆற்றினர். சிறுவனுக்கோ கால்வலி எடுத்துவிட்டது வெயில் வேறு கொளுத்துகிறது. பேருரையோ நீண்டுகொண்டே சென்றது.அந்த துன்பத்திலும் ஒரு இன்பம். முதல் பீரியட் கணிதம் அது கட் ஆகிவிடும். ஆனால் பாவம் அந்த சிறுவன் போட்ட கணக்கு பலிக்கவில்லை.
இரண்டாவது பீரியட் வர‌ வேண்டிய மிஸ் விடுப்பில் சென்றுவிட்டார்கள். அந்த வகுப்புக்கு வந்த கணித மிஸ் ஃப்ரைடே  கொடுத்த  ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சாச்சா என்று கேட்டார். எல்லோரும் ஹோம் வொர்க் நோட்டுகளை கொண்டு போய் மிஸ் மேஜை மீது  வைத்து விட்டு வந்தார்கள். சிறுவனின் நோட்டை திருத்துவதற்கு திருப்பினார் அதில் ஒன்றுமே இல்லை. வழக்கம் போல ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்து கொண்டு நின்றான். இங்க வாட கிட்ட என்று அழைத்து கூரிய நகத்தால் வயிற்றையும் காதையும் நன்றாக கிள்ளினார். எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு தன்னுடைய இருப்பிடம் நோக்கி வந்தான். ஏண்டா ஹோம் வொர்க் செய்யலைனு ஆதரவாக நண்பன் கேட்டான். ஹோம் வொர்க் இருக்குன் அம்மா ட சொன்ன அம்மா அடிச்சு அடிச்சு சொல்லிதருவாங்க அதான் செய்யலை மறந்து போய் டயரியையும் ஸ்கூல் விட்டுட்டு போய்டேன்.
தகவல் நண்பர்கள் மற்றும் இன்ன பிற வழிகள் மூலமாக விட்டுக்கு சென்றது. இவனை இப்படியே விட்டால் சரி வராது உடனே இவனை டியூஷன்ல சேர்த்தாதான் சரியா வருவான் என்று சொல்லி, பக்கத்தில் உள்ள அந்த சிறுவனின் உறவினர் நடத்தும் டுஷனில் கொண்டு போய் சேர்த்தார்கள். உங்கவாப்பா எவ்வளவு படிச்சவங்க. நீ ஏண்டா படிக்க மாட்டேங்குறே என்று சொல்லி அந்த டீச்சரும் தலை வாரும் சீப்பால் அடிப்பார்கள். அவ்வப் போது புள்ளைய அடிக்காமல் சொல்லிக்கொடு டி என்று ஒரு குரல். அந்த டியூஷன் டீச்சரின் அம்மா. அப்போது மட்டும் கொஞ்சம் அடியில் இருத்தும் விடுதலை கிடைக்கும் .இதற்கு எல்லாம் இடையில் அந்த சிறுவனின் உள்ளத்தில் ஒரு எண்ணம் என்னை ஏன் எல்லோரும் அடிக்கிறார்கள். எனக்கு படிக்க வேண்டும் என்று தான் விருப்பம் ஆனால் படிக்கிறது எதுவும் மனதில் நிற்பது இல்லை. கணிதத்தில் இரண்டாவது ஸ்டெப்பை தாண்டினால் தலை சுற்றுகிறது நான் என்ன செய்ய.

இது போன்ற படிக்க விரும்பும் பிள்ளைகளும் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் எதோ ஒரு விதக்குறை இருக்கிறது. அதை புரிந்து கொண்டு அவர்களுடன் அன்பான முறையில் நடந்து, அவர்களுக்கு புரிகிற முறையில் கல்வி புகட்ட எப்பொழுது நமது நட்டு கல்விமுறை தன்னை வல்ற்துக்கு கொள்ளும்மோ.

Friday, October 10, 2008

நினைவுக் கிட்டங்கி




அலுவலகத்தில் இருந்து வந்த என் நண்பன் ஒரு பாட்டு பதிவிறக்கம் செஞ்சுட்டு வந்துருக்கேன் கேளுன்னு சொல்லி கைபேசியை இயக்கினான். இசையில் அதிக ஆர்வம் இல்லாத நான் ஏதோ நண்பன் சொல்லுகிறானே என்று கேட்டேன். கேளடி கண்மணி என்ற பாடல் ஒலித்தது என் உள்ளக் கிட்டங்கியின் சாளரத்தின் வழியே காற்று வாங்கிக் கொண்டிருந்த என் நினைவு இந்த பாடலை காதில் வாங்கியதும் கிட்டங்கி கதவை வேகமாக திறந்து கொண்டு கால எந்திரத்தில் ஏறி விரைந்து சென்றது. நானும் இன்னொரு எந்திரத்தை எடுத்து கொண்டு செல்வதற்குள் என் இறந்த காலத்தின் பல ஆண்டுகளை கடந்து சென்றுவிட்டது. என் கால எந்திரத்தின் வேகத்தை இன்னும் அதிகரித்து கொண்டு அதை நெருங்கினேன். அது நேராக நான் பிறந்த ஊரை அடைந்தது.
சீனிவாபா கடைவாசலில் உள்ள வேப்பமரத்தின் அருகில் எந்திரத்தை நிறுத்தியது நானும் அதன் அருகே என் எந்திரத்தை நிறுத்திவிட்டு பார்த்தேன் ஊரெங்கும் என் நினைவுகள் சிதறிக் கிடந்தன. உடைந்த கண்ணாடி சில்லுகள் நம் முகத்தை வெவ்வேறு கோணங்களில் பிரதிபலிப்பது போல் இருந்தது.தொண்டியம்மன் கோவில் கோபுரம் கண்ணில்பட்டது அதன்பக்கம் என் நினைவு நகர்ந்தது அங்கு நாகுரம்மா தோளில் உட்க்கார்ந்து எருதுகட்டை(ஜல்லிக்கட்டு) ஒரு விதமான அச்சத்துடன் ரசித்துக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். ஊரில் உள்ள பாவடியில் சிறுவன் ஒருவன் தன் தாத்தாவிடம் அங்கு விற்கப்பட்ட கம்மஞ்சிட்டை(ஒரு வகையான சிட்டுகுருவி) வாங்கிக்கேட்டு அழுதுகொண்டிருந்தான்.
மெல்ல என் நினைவு ஊருக்குள் நடந்தது எம்.ஆர்.எம் ரைஸ் மில் அருகில் நெல் திரிப்பதற்காக மூடைகள் இறக்கப்பட்டு வெறும் வண்டிகள் மட்டும் நின்றன அதில் சிறுவன் ஒருவன் பிபி பிபி....... பூம் பூம்..... என்று ஓசை எழுப்பிக்கொண்டு அங்குள்ள சிறுவர்களிடம் டிக்கெட் வாங்கி அவர்களை அதில் ஏற்றியும் இறக்கியும் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கே இருந்த நெல் கிட்டங்கியை பார்த்து வேகமாக அதற்குள் சென்றது அந்த நெடிதுஉயர்ந்த அகண்ட செவருக்கு நடுவில் இந்த நெல்லு மூடையை எப்படி அவ்வளவு உயரத்துல வச்சாங்க என்று வெகுளியாக தன் தாத்தாவிடம் கேட்டு கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அதை விட்டு வெளியேறி தெற்குத்தெருவை நோக்கி நடந்தது அங்கு பல சிறுவர்கள் நாளைக்கு பெருநாள்.....!!!!!!!!! நம்மளுக்கு தேவலை...!!!!! என்று என்று கூவிக்கொண்டு சென்றனர்.
நேராக அது ஒரு கொல்லைக்கு அருகே சென்று மெதுவாக எட்டிப்பார்தது அங்கு ஒரு சிறுவன் பூவரச மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஒய்யாரமாக உந்தி உந்தி ஆடிகொண்டிருந்தான். அப்படியே கடற்கரையை நோக்கி நடந்து சென்றது அங்கு ஒரு சிறுவன் பள்ளிக்கு மட்டம் அடித்துவிட்டு எந்தவித கவலையும் இல்லாமல் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான் . அதை கடந்து புதுபள்ளிவாசல் அருகே உள்ள திடலை அடைந்தது. அங்கு ஒரு சிறுவன் என் பேராண்டி வாங்கப்போற பரிசை கொண்டுவர ஒரு பெரிய சாக்குப்பை கொண்டுபோங்கப்ப என்ற தாத்தாவின் பகடியை உள்ளத்தில் தாங்கி கொண்டு புன்முறுவலுடன் ஒரு மேடைக்கு எதிரில் அமர்ந்து இருந்தான்.
இறுதியாக அது என் மச்சான் விட்டுக்கு அருகில் உள்ள பாசிப் பட்டினத்துக்காரர்கள் வீட்டுக்கு அருகில் சென்று ஏ டே!!!!! இங்க செத்த வாடே.... என்ற மொழிநடையை ரசித்து வீட்டு நேராக என் மச்சான் வீட்டை நெருங்கியது. எங்குபார்த்தாலும் தோரணம் கட்டி பந்தல் போட்டு வீடே திருமணக்களை கொண்டிருந்தது.வீட்டு வாசலில் என் மச்சானுக்கு நாசுவனார் முகச் சவரம் செய்து கொண்டிருந்த அவர் அருகில் ஊர் வழக்கப்படி ஒரு பாத்திரத்தில் அரிசியும் சில முட்டையும் கொஞ்சம் பணமும் வைக்கப்பட்டிருந்தது. வீட்டின் எதோ ஒரு மூலையில் இருந்து அதே பாடல் எந்த பாடலின் நினைவு படிமத்தை தேடிக்கொண்டு வந்ததோ அந்தப்பாடல் ஓசை வரும் திசையை நோக்கி நடந்தது அங்கும் அந்த சிறுவன் சம்மனக்கால் போட்டு அமர்ந்து அந்த பாடலை கேடுக்கொண்டிருந்தான் என் நினைவு அங்கே நின்றது அழுத்தமாய் பதிந்த அந்த திருமண நிகழ்வை அசை போட்டு மகிழ்ந்து கொண்டிருந்தது . எனக்கு அப்பொழுதுதான் நிகழ்காலம் உறங்கு நிலையில் இருப்பது நினைவுக்கு வர என் எந்திரத்தின் விசையை முடுக்கி கொண்டு நிகழ்காலத்தை நோக்கி விரைந்தேன்........

Wednesday, September 24, 2008

நிலா காய்கிறது





நான்
ஒரு கோப்பை தேனிர்
நிலவொளி நிறைந்த வானம் !
எங்களுக்கிடையிலான உரையாடல் தான் எத்துணை இனிமையானவை !
நிலவே நினைவு இருகிறதா ?
என் குழந்தை பருவத்தில்
நீ வான ஓடையில் அன்ன நடைப்போட்டு செல்லும் அழகை
ரசித்துக்கொண்டே வீடு நோக்கி செல்வேன் ;
என் விரல்களை பற்றிக்கொண்டு நீ அழைத்துச்
செல்லுவதை போன்ற உணர்வுடன் !
பள்ளங்களும் சாக்கடைகளும் என் கால்களை இடறி விட்டு
வலியால் கண்களில் நீர் அரும்பிய போதும் உன் மிதான
பார்வை மீண்டதே இல்லை !
உன் ஒளி கீற்றால் என் விட்டு யூகலிப்டஸ் மரத்தின் கூரிய
இலைகளால் வெண் முத்தாக உருமாறி என் விட்டு
முற்றத்தில் துள்ளிகுதித்து குதூகலிப்பாய் !
என் கைகளை கன்னங்களில் முட்டுக் கொடுத்து
உன் விளையாட்டை குறுஞ் சிரிப்புடன் கண்கொட்டாமல்
ரசித்துக்கொண்டே இருப்பேன் !
யூகலிப்டஸின் மென் காற்று அந்த தருணத்தை இன்னும்
இனிமையாக்கின !
முழு மதியே !
இப்பொழுதெல்லாம் உன்னுடன் உரையாடவும்
உன் விரல் பிடித்து நடக்கவும் இந்த அவசரகதி
வாழ்க்கை அனுமதிப்பதில்லை !

Thursday, September 11, 2008

கடிதமும் நானும்


பணி நிமித்தமாக வெளியூரில் தங்க ஆரம்பித்த காலம் முதல் வீட்டுக்குக் கடிதம் எழுதும் பழக்கம் இருந்து வருகிறது. என் நண்பர்கள் ஏன்டா இந்த கணினி யுகத்திலும் இப்படி என்று கிண்டல் செய்வார்கள். அந்த உறுத்தலால் இதற்கான காரணத்தை தேடி என் ஆழ்மன படிமத்தில் இறங்கி அகழ்வாராட்சி செய்தபோது சில தகவல்கள் கிடைத்தன. என் சொந்த ஊரு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்த்த தொண்டி என்னும் பேரூர் அலை இல்லாத கடல். நீரில் ஓடும் மீன்களை காணும் அளவுக்கு கண்ணாடி மாதிரி கடல் நீர். நடுக்கடல் வரை சென்றுவர அருமையானப் பாலம். ஆண்டு தோறும் நடக்கும் படகு (வத்தல்) போட்டி ஒரு அருமையான அனுபவம். அப்படியே தெருவிற்குள் நடந்து வந்தால் கிச்சி கிச்சி தம்பலம் விளையாடும் அளவுக்கு பூ போன்ற சாக்கடைகள் அற்ற மணல் சாலை. எந்நேரமும் விளையாடுவதற்கு நண்பர்கள் கூட்டம். முள்ளு காட்டில் தோட்டம் கட்டி கூட்டான் சோறு விளையாட்டு. மாந்தோப்பில் மாங்காய் தின்றுவிட்டு கல்லு குளத்தில் முக்குளி குளியல். அப்படியே வீட்டுக்கு வந்தால் மஞ்சட்டியில் காய்ச்சிய மீன் ஆனத்துடன் சோறு ஊட்டுக்குழியில் ஊறவைத்த அதிரச மாவை அப்படியே சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் வாங்கிய உதைகள் . மச்சான் மச்சியின் கிண்டல்கள். மச்சியிடம் கதை கேட்டுக்கொண்டே இரவு கண்ணயர்வு. நோன்பு பெருநாள் சாயங்காலம் அலைவாய்கரை ( விழா காலங்களில் பெண்கள் மாற்றும் குழந்தைகள் மட்டும் குழுமும் இடம்) அம்மாவுடன் சென்று உறவினர்களுடன் விளையாடிவிட்டு விளையாட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்த நினைவு. இவ்வாறு நான் என் ஊருடன் நகமும் சதையுமாக இருத்தபோது. என் தந்தையாருக்கு திருநெல்வேலியில் வேலை கிடைத்தது. தொண்டியை விட்டு கிளம்பும் நாள் வந்தது என் மூதாதையர்களின் சத்தில் வளர்த்த மரங்கள் வரைந்த வழியனுப்பு மடலின் இறுதி சொல்லை வாசித்துவிட்டு என் கண்ணிரை பதிலாகக் கொடுத்து விட்டு ஊர்தியின் உள்பக்கம் தலையை இழுத்து என் தாய் மடியில் தஞ்சம் புகுந்தேன் . சொந்த ஊரை மிகவும் நேசிக்கும் சிறுவனுக்கு உண்டான வலியுடன் திருநெல்வேலியை அடைந்தேன். என்னை விட்டு ஊர் நினைவு அகலவே இல்லை அப்பொழுதுதான் என் தாத்தாவிடம் இருந்து எல்லோரின் நலம் பற்றியும் ஊர் செய்திகளுடன் கடிதம் ஒன்று வந்தது. அந்த நாள் முதல் என் அம்மாவிடம் மறுபடியும் கடிதம் எப்போது வரும் என்று நச்சரித்து வந்தேன் . மாதம் தோறும் ஒரு கடிதமாவது எப்படியும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடும். இதனால் கடிதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்து அது என் வாழ்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது . அந்த பழக்கம் தான் இன்று வரையிலும் என்னுடன் இணை பிரியா தோழனை போல் தொடருகிறது.

Thursday, September 4, 2008

காட்சி பிழைதானோ ?


அலுவலகத்தின் பொருளற்ற சொல் மழையில் இருந்து தப்பி. இயற்கையின் மெல்லிய தூரலில் நனைந்தவனாகப் பேருந்து நிலையத்தை நோக்கி ஆட்டோவில் விரைந்தேன். தூறல் நின்றபாடில்லை ஆனால் பேருந்து நிலையம் வந்துவிட்டது. வீட்டுக்கு வாங்கிய பொருட்கள் நனைந்து விடாமல் பேருந்தில் ஏற்றிவிட்டு என் இருக்கையில் போய் சாய்ந்தேன். வண்டியை எடுக்கப் போகும் சமயத்தில் ஒரு பெண்மணி வேகமாக ஏறினார். பெண்களுக்கு அருகில் அவருக்கு இருக்கை ஒதுக்காமல் ஆண்களுக்கு அருகில் இருக்கை ஒதுக்கி இருந்தார்கள்.அந்த அம்மணி போட்ட சண்டையில் பேருந்து புறப்பட தாமதம் ஆனது. எனக்கோ எப்போடா ஊருக்குப் போய்ச் சேருவோம் எல்லாரையும் பார்ப்போம் என்று இருந்தது .ஒருவழியாக இங்கிருப்பவரை அங்கு மாற்றி அங்கிருப்பவரை இங்கு மாற்றி அமரவைத்து பிரச்னை முடிக்கப்பட்டது. பேருந்து மெல்ல ஊர்தி வெள்ளத்தில் ஊர்ந்து சென்றது. இடை இடையே வழி மறிக்கும் சிக்னலில் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டு நகர்ந்து ஓசூர் எல்லையைத் தொட்டுவிட்டது. அப்பாடா எந்தவித சேதாரமும் இல்லாமல் தமிழக எல்லையைத் தொட்டுவிட்டோம் என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் உறக்கம் கண்ணைக் கவ்வியது. அருகில் இருப்பவரின் குறட்டைத் தொந்தரவு இல்லாமல் ஆழ்ந்த உறக்கம். அதிகாலை பகலவனின் ஒளிக் கீற்று உடலில் மென்மையான சூட்டைப் பரப்பி எழுமின் என்றது . மெதுவாக கண்ணைக் கசக்கி விழித்து பார்வையை சாலையின் இருபக்கத்திலும் மேயவிட்டேன். வழக்கமான பொட்டல் காடு ஒன்று இரண்டு தூறல் விழுந்ததற்கான சுவடுகள் ஆங்காங்கே தென்பட்டன. ஊர் எல்லையில் செம்புடன் காலைக் கடனைக் கழிக்க மக்கள் சென்றுகொண்டிருந்தனர். நெல்லைச் சீமையைப் பேருந்து தொட்டது. மழை கொஞ்சம் மண்ணை நனைத்து ஊரெங்கும் மண்வாசனையை பரப்பி இருந்தது. வாசனையை நுகர்ந்தவனாக பேருந்தில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறினேன். தாமிரபரணி ஆற்றைக் கடக்கும் போது கண்ணோடு சேர்ந்து மனதும் குளிர்ந்தது. ஆனால் தாமிரபரணியை கங்கைகொண்டானில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதால் தண்ணிருக்காக மண்ணின் மைந்தன் லோல்படுவதை நினைக்கையில் மனக் குளிர்ச்சி வலியாக மாறியது. நெல்லை மாறி கொண்டிருக்கிறது பெரும்பாலான கடைகளில் தமிழ் பெயர்ப் பலகைகள் மறைந்து ஆங்கில பெயர்ப் பலகைகளாகிக் கொண்டிருக்கிறது. வயல்கள் எல்லாம் மிகப்பெரிய கட்டிடங்களாகிக் கொண்டிருக்கிறது. குளிக்கும் வாய்க்கால்கள் எல்லாம் கழிவுநீர் வடிகால்களாக மாறிக் கொண்டிருக்கிறது. கால ஓடத்தின் வேகத்தில் ஈடு கொடுக்க முடியாமல் நாம் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு எழுத்தையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் .

நம்முடைய ஆறுகளைத் தொலைக்காமல்
நம்முடைய வயல்களைத் தொலைக்காமல்
நம்முடைய மொழியைத் தொலைக்காமல்
நாம் முன்னேறவே முடியாதா. நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக மம்மியாகவும் டாடியாகவும் மாறித்தான் ஆக வேண்டு்மா. என்ற வேதனை மிகுந்த கேள்விகளுடன் என் வீட்டை அடைந்தேன் .

Saturday, August 30, 2008

அறிவியல் தமிழ் ஏன் வேண்டும் ?


தமிழ் 2000 ஆண்டு பழமையான மொழி என்ற சிறப்பை மட்டும் சொல்லிக்கொண்டு எத்தனை நாள் தான் காலம் தள்ளுவது. எங்களிடம் 2000 ஆண்டு பழமையான இலக்கியங்கள் இருக்கின்றன என்ற சங்கதிகள் மட்டும் தமிழை வாழவைக்க இந்த நுற்றாண்டில் போதுமானவையாக இல்லை. அந்த காலத்தில் உலகம் முழுவதும் இலக்கியப்புரட்சி நடந்தது. அதற்கு ஈடாக நமது முன்னோர்களும் சிறப்பான இலக்கியங்களை சமைத்து தந்து மறைந்துவிட்டனர். இந்த நுற்றாண்டில் உலகம் முழுவதும் அறிவியல் புரட்சி நடக்கிறது.அவர் அவர் கண்டுபிடித்த பொருட்களுக்கு, அவர் அவர் மொழிகளில் பெயர் இட்டுகொண்டனர். கடந்த 300 அண்டுகால தமிழ் வரலாறை பின்னோக்கி பார்த்தால் அறிவியல் மற்றும் இலக்கியத்துறை சார்ந்து உலகத்தின் பார்வை நம்மீது படும்விதமாக எந்த ஒன்றும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. தமிழ் இன்னும் சில நுற்றாண்டில் எந்த வித பேரழிவும் இல்லாமல் வாழவேண்டும் என்றால், அறிவியல் தமிழ் என்ற ஒன்று மிகவும் இன்றி அமையாத ஒன்றாக இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ் எங்கள் உயிர் மூச்சு தமிழ் இல்லையேல் நாங்கள் இல்லை என்று மேடையில் முழங்கிய திராவிட கட்சிகள் தான் கோலோச்சி வந்துள்ளன. அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டுதான் என்ன. அவர்கள் தமிழை எந்த நிலையில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள் என்று சிந்தித்து பார்த்தால். தமிழ் எழுத படிக்க இன்னும் சொல்லப்போனால் முறையாக பேசக்கூட தெரியாத மிகப்பெரிய இளைஞர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் வழி கல்வி சொல்லி கொடுக்கும் பாடசாலைகளின் நிலைமை இன்னும் பரிதாபம். அதை திறம்பட இயங்க எந்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் இன்றுவரை நடந்ததாக தெரியவில்லை. இதனால் உலகின் பல தளங்களில் பணியாற்றும் நம்போன்றவர்கள் தான் இந்த அறிவியல் தமிழ் என்ற பார்வையை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது . அறிவியல் தமிழை உருவாக்க தமிழ் அறிவுடன் நவினத்துறை சார்ந்த அறிவும் தேவைப்படுகிறது. நம்முடைய முத்தமிழ் குழுமத்தில் அனைத்து துறை சார்ந்த வல்லுனர்களும் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். நாம் நினைத்தால் இதை மிக சிறப்பாக செய்யலாம். எழுத்தாளர் சுஜாதா லினக்ஸ் இயங்கு தளத்தை சில கல்லூரி மாணவர்களுடன் இனைந்து ஒரு மளிகை கடைகாரர் கூட பயன்படுதும் விதமாக தமிழில் மொழியாக்கம் செய்துள்ளதாக கற்றதும் பெற்றதும்மில் படித்த நினைவு இருகிறது. இதை போன்று அறிவியல் தமிழுக்கான திட்டங்கள் நம்முன் விரிந்து கிடக்கின்றன. நம்முடைய அன்றாட அலுவல்களுக்கு நடுவில் சில மணித்துளிகளை ஒதுக்கி. முறையான திட்டம் வகுத்துக்கொண்டு செயல்படலாம். ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு இழை இட்டு. அந்த துறை சார்ந்த கலை சொற்களை அதில் சேர்க்கலாம்.
உதாரண தலைப்பு
அ) ஊடகவியல்- ஆங்கில செய்தி தாள்களில் வரும் புது புது சொற்களை மொழி பெயர்த்து இந்த இழையில் இடலாம்
ஆ) சட்டம்
இ) மருத்துவம்
ஈ) புவியியல்
உ) குடிமையியல்
ஊ) இணையதளம்
மேலும் பல தலைப்புகளில் இழை இட்டு கலை சொற்களை சேகரித்து கோப்பாக மாற்றி.
இணையத்தில் பரப்பலாம். மேலும் நம்முடைய குழும ஆண்டு சந்திப்பில். இந்த துறை
சார்ந்த மாணவர்களை அழைத்து அறிமுக உரை நிகழ்த்தி கலை சொற்களை நூல்வடிவில் கொடுக்கலாம். இதற்கு
திரு.மஞ்சூர் ராசா அவர்கள் நல்ல முறையில் திட்டம் வகுத்து எங்களை வழி நடத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்


குறிப்பு: இந்த உரையாடலில் கலந்துகொள்ள விருபுபவர்கள் இந்த குழுவுக்கு வரவும்.

http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/16cdcc3e6daa2fcc?hl=ta#

Saturday, August 9, 2008

தமிழ்மண்


தமிழரின் வரலாறு மற்றும் மொழி சார்ந்த வரலாறு அது எத்துனை இடர்களை தாண்டி நம்மிடம் இந்தவடிவில் வந்து சேர்த்துள்ளது என்பன போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள தேவையான் நூல்களை தேடும்போது எனக்கு ஒரு இனையதளம் கிடைத்தது .இடைகால தமிழ் அறிஞர்களின் நூல்கள் எல்லாம் இந்த பதிப்பகம் வெளியிடுகிறது.அனைத்தும் மிகவும் பயன் உள்ள கிடைப்பதற்கு அறிய நூல்கள். எல்லோரும் பயன்பெற வேண்டும் என்று இனைய முகவரியை இங்கு தருகிறேன்

http://www.tamilmann.in/index.html

Thursday, July 17, 2008

தமிழ் கண்ணீர்


அடையாளத்தை தொலைத்து கொண்டிருக்கும்,
என் தமிழ் சமூகம்மே,
உன் மீது கொஞ்சம் இரக்கப்படு!

ஆற்று வெள்ளத்தால்,
அடித்துச் செல்லப்பட்ட,
பாறாங்கல் நான் ,
துகலாக எஞ்சி இருக்கிறேன் ....

கணினி யுக மனித கண்ணிர்


கணிப்பொறி என்னும் பொறிக்கு
இரையாகிப் போனத் துரித உணவு!

வீட்டைப் பொறியாக்கி அதன்
வாட்டத்தில் ஆடும் நவீன எந்திரா (ரோபோ) !

பொறிக்கு நேரத்தை கொடுத்து
வீட்டுக்கு உறக்கத்தை கொடுத்து

உறவினர்களின் பழி சொல்லுக்கு
ஆளான நேர்மையான குற்றவாளி !

தனி தமிழ் இயக்கம்


என் இனிய தமிழ் மக்களே,
சமஷ்கிருத மற்றும் ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து தமிழ்ச் சொல்லை பயன்படுத்த முயல வேண்டும். நான் ஹிந்தி மொழி பேசுபவர்கள் மற்றும் மலையாளிகளோடு பணிப்புரிகிறேன் அவர்கள் தெளிவாக பிறமொழி சொற்களைக் கலக்காமல் பேசுகிறார்கள். என்னோடு தமிழர்களும் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தமிழா என்று சந்தேகம் வருகிற அளவுக்கு பிறமொழி சொற்களை பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் தமிழை அறவே பேசுவதே இல்லை. உலகமயமாக்கலில் இவ்வாறு தமிழ் பேசிக்கொண்டிருந்தால் பிழைக்க முடியுமா? என்கிறார்கள். தாய்மொழி சோறு போடுமா, காசு கொடுக்குமா என்றெல்லாம் கேட்கும் ஒரே இனம் நாமாகத்தான் இருக்க முடியும். ஏன் தமிழர்களிடைய தமிழ்பற்று குறைந்துக்கொண்டே செல்கிறது என்று புரியவில்லை. ஒரு இனத்தின் அடையாளம் அதன் மொழிதான் அது அழிந்துவிட்டால் அந்த இனம் இருந்த அடையாளம் இல்லாமல் போய்விடும். பிறகென்ன BBCகாரன் வந்து ஒரு கூச்சை வைத்து இங்குதான் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் என்ற மொழியை பேசிய தமிழினம் என்ற ஒரு இனம் இருந்தது என்று நம்முடைய சந்ததிகளுக்கு படம் எடுப்பான். தமிழ் எத்தனையோ எதிரிகளை சந்தித்து வந்துள்ளது அனைவரும் வேறு மொழியை சார்ந்தவர்கள். தற்கால தமிழின் எதிரிகளோ அதன் பிள்ளைகள். எங்குப்போய் இதை சொல்லி அழுவது! இந்த வேதனையை மாற்ற தமிழின் மீது பற்று கொண்ட நம்மைப் போன்றவர்கள் முயல வேண்டும். நல்ல தமிழில் பேசவேண்டும், மற்றவர்கள் தமிழில் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும். மற்ற மொழிகளை கலக்காமல் தமிழிலேயே பேச முயற்சிக்கவேண்டும். என் முதல் முயற்சியாக சில தமிழ்சொற்களும் அதற்கு நிகரான பிறமொழி சொற்களையும் தருகிறேன். இதில் எதாவது பிழைகள் இருந்தால் தயவுசெய்து திருத்தவும்.

ஜாஸ்தி – அதிகம்
கம்மி – குறைவு
கஷ்டம் – சிரமம்
சந்தோஷம் – மகிழ்ச்சி
தயார் – ஆயத்தம்
சாதம் – சோறு
நிஜம் – உண்மை
தினமும் – நாள்தோறும்
super - அருமை, பிரமாதம், அசத்தல்
இஷ்டம் - விருப்பம்
வாபஸ் – திரும்ப
மாமுல் - வழக்கம்

தயவு செய்து அன்றாட வாழ்க்கையில் நாம் பயன் படுத்தும் மேற்கண்ட தமிழ்ச் சொற்களை நீங்கள் பயன்படுத்துவது மட்டும்மல்லாது உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் பயன்படுத்த சொல்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் அழியாமல் காக்க முயற்சிப்போம். இது போல உங்களுக்கும் பல புதிய தமிழ்ச் சொற்கள் தெரிந்திருந்தால் அதையும் குறிப்பிடுங்கள்.