
அலுவலகத்தில் இருந்து வந்த என் நண்பன் ஒரு பாட்டு பதிவிறக்கம் செஞ்சுட்டு வந்துருக்கேன் கேளுன்னு சொல்லி கைபேசியை இயக்கினான். இசையில் அதிக ஆர்வம் இல்லாத நான் ஏதோ நண்பன் சொல்லுகிறானே என்று கேட்டேன். கேளடி கண்மணி என்ற பாடல் ஒலித்தது என் உள்ளக் கிட்டங்கியின் சாளரத்தின் வழியே காற்று வாங்கிக் கொண்டிருந்த என் நினைவு இந்த பாடலை காதில் வாங்கியதும் கிட்டங்கி கதவை வேகமாக திறந்து கொண்டு கால எந்திரத்தில் ஏறி விரைந்து சென்றது. நானும் இன்னொரு எந்திரத்தை எடுத்து கொண்டு செல்வதற்குள் என் இறந்த காலத்தின் பல ஆண்டுகளை கடந்து சென்றுவிட்டது. என் கால எந்திரத்தின் வேகத்தை இன்னும் அதிகரித்து கொண்டு அதை நெருங்கினேன். அது நேராக நான் பிறந்த ஊரை அடைந்தது.
சீனிவாபா கடைவாசலில் உள்ள வேப்பமரத்தின் அருகில் எந்திரத்தை நிறுத்தியது நானும் அதன் அருகே என் எந்திரத்தை நிறுத்திவிட்டு பார்த்தேன் ஊரெங்கும் என் நினைவுகள் சிதறிக் கிடந்தன. உடைந்த கண்ணாடி சில்லுகள் நம் முகத்தை வெவ்வேறு கோணங்களில் பிரதிபலிப்பது போல் இருந்தது.தொண்டியம்மன் கோவில் கோபுரம் கண்ணில்பட்டது அதன்பக்கம் என் நினைவு நகர்ந்தது அங்கு நாகுரம்மா தோளில் உட்க்கார்ந்து எருதுகட்டை(ஜல்லிக்கட்டு) ஒரு விதமான அச்சத்துடன் ரசித்துக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். ஊரில் உள்ள பாவடியில் சிறுவன் ஒருவன் தன் தாத்தாவிடம் அங்கு விற்கப்பட்ட கம்மஞ்சிட்டை(ஒரு வகையான சிட்டுகுருவி) வாங்கிக்கேட்டு அழுதுகொண்டிருந்தான்.
மெல்ல என் நினைவு ஊருக்குள் நடந்தது எம்.ஆர்.எம் ரைஸ் மில் அருகில் நெல் திரிப்பதற்காக மூடைகள் இறக்கப்பட்டு வெறும் வண்டிகள் மட்டும் நின்றன அதில் சிறுவன் ஒருவன் பிபி பிபி....... பூம் பூம்..... என்று ஓசை எழுப்பிக்கொண்டு அங்குள்ள சிறுவர்களிடம் டிக்கெட் வாங்கி அவர்களை அதில் ஏற்றியும் இறக்கியும் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கே இருந்த நெல் கிட்டங்கியை பார்த்து வேகமாக அதற்குள் சென்றது அந்த நெடிதுஉயர்ந்த அகண்ட செவருக்கு நடுவில் இந்த நெல்லு மூடையை எப்படி அவ்வளவு உயரத்துல வச்சாங்க என்று வெகுளியாக தன் தாத்தாவிடம் கேட்டு கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அதை விட்டு வெளியேறி தெற்குத்தெருவை நோக்கி நடந்தது அங்கு பல சிறுவர்கள் நாளைக்கு பெருநாள்.....!!!!!!!!! நம்மளுக்கு தேவலை...!!!!! என்று என்று கூவிக்கொண்டு சென்றனர்.
நேராக அது ஒரு கொல்லைக்கு அருகே சென்று மெதுவாக எட்டிப்பார்தது அங்கு ஒரு சிறுவன் பூவரச மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஒய்யாரமாக உந்தி உந்தி ஆடிகொண்டிருந்தான். அப்படியே கடற்கரையை நோக்கி நடந்து சென்றது அங்கு ஒரு சிறுவன் பள்ளிக்கு மட்டம் அடித்துவிட்டு எந்தவித கவலையும் இல்லாமல் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான் . அதை கடந்து புதுபள்ளிவாசல் அருகே உள்ள திடலை அடைந்தது. அங்கு ஒரு சிறுவன் என் பேராண்டி வாங்கப்போற பரிசை கொண்டுவர ஒரு பெரிய சாக்குப்பை கொண்டுபோங்கப்ப என்ற தாத்தாவின் பகடியை உள்ளத்தில் தாங்கி கொண்டு புன்முறுவலுடன் ஒரு மேடைக்கு எதிரில் அமர்ந்து இருந்தான்.
இறுதியாக அது என் மச்சான் விட்டுக்கு அருகில் உள்ள பாசிப் பட்டினத்துக்காரர்கள் வீட்டுக்கு அருகில் சென்று ஏ டே!!!!! இங்க செத்த வாடே.... என்ற மொழிநடையை ரசித்து வீட்டு நேராக என் மச்சான் வீட்டை நெருங்கியது. எங்குபார்த்தாலும் தோரணம் கட்டி பந்தல் போட்டு வீடே திருமணக்களை கொண்டிருந்தது.வீட்டு வாசலில் என் மச்சானுக்கு நாசுவனார் முகச் சவரம் செய்து கொண்டிருந்த அவர் அருகில் ஊர் வழக்கப்படி ஒரு பாத்திரத்தில் அரிசியும் சில முட்டையும் கொஞ்சம் பணமும் வைக்கப்பட்டிருந்தது. வீட்டின் எதோ ஒரு மூலையில் இருந்து அதே பாடல் எந்த பாடலின் நினைவு படிமத்தை தேடிக்கொண்டு வந்ததோ அந்தப்பாடல் ஓசை வரும் திசையை நோக்கி நடந்தது அங்கும் அந்த சிறுவன் சம்மனக்கால் போட்டு அமர்ந்து அந்த பாடலை கேடுக்கொண்டிருந்தான் என் நினைவு அங்கே நின்றது அழுத்தமாய் பதிந்த அந்த திருமண நிகழ்வை அசை போட்டு மகிழ்ந்து கொண்டிருந்தது . எனக்கு அப்பொழுதுதான் நிகழ்காலம் உறங்கு நிலையில் இருப்பது நினைவுக்கு வர என் எந்திரத்தின் விசையை முடுக்கி கொண்டு நிகழ்காலத்தை நோக்கி விரைந்தேன்........