Wednesday, September 24, 2008

நிலா காய்கிறது





நான்
ஒரு கோப்பை தேனிர்
நிலவொளி நிறைந்த வானம் !
எங்களுக்கிடையிலான உரையாடல் தான் எத்துணை இனிமையானவை !
நிலவே நினைவு இருகிறதா ?
என் குழந்தை பருவத்தில்
நீ வான ஓடையில் அன்ன நடைப்போட்டு செல்லும் அழகை
ரசித்துக்கொண்டே வீடு நோக்கி செல்வேன் ;
என் விரல்களை பற்றிக்கொண்டு நீ அழைத்துச்
செல்லுவதை போன்ற உணர்வுடன் !
பள்ளங்களும் சாக்கடைகளும் என் கால்களை இடறி விட்டு
வலியால் கண்களில் நீர் அரும்பிய போதும் உன் மிதான
பார்வை மீண்டதே இல்லை !
உன் ஒளி கீற்றால் என் விட்டு யூகலிப்டஸ் மரத்தின் கூரிய
இலைகளால் வெண் முத்தாக உருமாறி என் விட்டு
முற்றத்தில் துள்ளிகுதித்து குதூகலிப்பாய் !
என் கைகளை கன்னங்களில் முட்டுக் கொடுத்து
உன் விளையாட்டை குறுஞ் சிரிப்புடன் கண்கொட்டாமல்
ரசித்துக்கொண்டே இருப்பேன் !
யூகலிப்டஸின் மென் காற்று அந்த தருணத்தை இன்னும்
இனிமையாக்கின !
முழு மதியே !
இப்பொழுதெல்லாம் உன்னுடன் உரையாடவும்
உன் விரல் பிடித்து நடக்கவும் இந்த அவசரகதி
வாழ்க்கை அனுமதிப்பதில்லை !

Thursday, September 11, 2008

கடிதமும் நானும்


பணி நிமித்தமாக வெளியூரில் தங்க ஆரம்பித்த காலம் முதல் வீட்டுக்குக் கடிதம் எழுதும் பழக்கம் இருந்து வருகிறது. என் நண்பர்கள் ஏன்டா இந்த கணினி யுகத்திலும் இப்படி என்று கிண்டல் செய்வார்கள். அந்த உறுத்தலால் இதற்கான காரணத்தை தேடி என் ஆழ்மன படிமத்தில் இறங்கி அகழ்வாராட்சி செய்தபோது சில தகவல்கள் கிடைத்தன. என் சொந்த ஊரு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்த்த தொண்டி என்னும் பேரூர் அலை இல்லாத கடல். நீரில் ஓடும் மீன்களை காணும் அளவுக்கு கண்ணாடி மாதிரி கடல் நீர். நடுக்கடல் வரை சென்றுவர அருமையானப் பாலம். ஆண்டு தோறும் நடக்கும் படகு (வத்தல்) போட்டி ஒரு அருமையான அனுபவம். அப்படியே தெருவிற்குள் நடந்து வந்தால் கிச்சி கிச்சி தம்பலம் விளையாடும் அளவுக்கு பூ போன்ற சாக்கடைகள் அற்ற மணல் சாலை. எந்நேரமும் விளையாடுவதற்கு நண்பர்கள் கூட்டம். முள்ளு காட்டில் தோட்டம் கட்டி கூட்டான் சோறு விளையாட்டு. மாந்தோப்பில் மாங்காய் தின்றுவிட்டு கல்லு குளத்தில் முக்குளி குளியல். அப்படியே வீட்டுக்கு வந்தால் மஞ்சட்டியில் காய்ச்சிய மீன் ஆனத்துடன் சோறு ஊட்டுக்குழியில் ஊறவைத்த அதிரச மாவை அப்படியே சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் வாங்கிய உதைகள் . மச்சான் மச்சியின் கிண்டல்கள். மச்சியிடம் கதை கேட்டுக்கொண்டே இரவு கண்ணயர்வு. நோன்பு பெருநாள் சாயங்காலம் அலைவாய்கரை ( விழா காலங்களில் பெண்கள் மாற்றும் குழந்தைகள் மட்டும் குழுமும் இடம்) அம்மாவுடன் சென்று உறவினர்களுடன் விளையாடிவிட்டு விளையாட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்த நினைவு. இவ்வாறு நான் என் ஊருடன் நகமும் சதையுமாக இருத்தபோது. என் தந்தையாருக்கு திருநெல்வேலியில் வேலை கிடைத்தது. தொண்டியை விட்டு கிளம்பும் நாள் வந்தது என் மூதாதையர்களின் சத்தில் வளர்த்த மரங்கள் வரைந்த வழியனுப்பு மடலின் இறுதி சொல்லை வாசித்துவிட்டு என் கண்ணிரை பதிலாகக் கொடுத்து விட்டு ஊர்தியின் உள்பக்கம் தலையை இழுத்து என் தாய் மடியில் தஞ்சம் புகுந்தேன் . சொந்த ஊரை மிகவும் நேசிக்கும் சிறுவனுக்கு உண்டான வலியுடன் திருநெல்வேலியை அடைந்தேன். என்னை விட்டு ஊர் நினைவு அகலவே இல்லை அப்பொழுதுதான் என் தாத்தாவிடம் இருந்து எல்லோரின் நலம் பற்றியும் ஊர் செய்திகளுடன் கடிதம் ஒன்று வந்தது. அந்த நாள் முதல் என் அம்மாவிடம் மறுபடியும் கடிதம் எப்போது வரும் என்று நச்சரித்து வந்தேன் . மாதம் தோறும் ஒரு கடிதமாவது எப்படியும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடும். இதனால் கடிதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்து அது என் வாழ்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது . அந்த பழக்கம் தான் இன்று வரையிலும் என்னுடன் இணை பிரியா தோழனை போல் தொடருகிறது.

Thursday, September 4, 2008

காட்சி பிழைதானோ ?


அலுவலகத்தின் பொருளற்ற சொல் மழையில் இருந்து தப்பி. இயற்கையின் மெல்லிய தூரலில் நனைந்தவனாகப் பேருந்து நிலையத்தை நோக்கி ஆட்டோவில் விரைந்தேன். தூறல் நின்றபாடில்லை ஆனால் பேருந்து நிலையம் வந்துவிட்டது. வீட்டுக்கு வாங்கிய பொருட்கள் நனைந்து விடாமல் பேருந்தில் ஏற்றிவிட்டு என் இருக்கையில் போய் சாய்ந்தேன். வண்டியை எடுக்கப் போகும் சமயத்தில் ஒரு பெண்மணி வேகமாக ஏறினார். பெண்களுக்கு அருகில் அவருக்கு இருக்கை ஒதுக்காமல் ஆண்களுக்கு அருகில் இருக்கை ஒதுக்கி இருந்தார்கள்.அந்த அம்மணி போட்ட சண்டையில் பேருந்து புறப்பட தாமதம் ஆனது. எனக்கோ எப்போடா ஊருக்குப் போய்ச் சேருவோம் எல்லாரையும் பார்ப்போம் என்று இருந்தது .ஒருவழியாக இங்கிருப்பவரை அங்கு மாற்றி அங்கிருப்பவரை இங்கு மாற்றி அமரவைத்து பிரச்னை முடிக்கப்பட்டது. பேருந்து மெல்ல ஊர்தி வெள்ளத்தில் ஊர்ந்து சென்றது. இடை இடையே வழி மறிக்கும் சிக்னலில் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டு நகர்ந்து ஓசூர் எல்லையைத் தொட்டுவிட்டது. அப்பாடா எந்தவித சேதாரமும் இல்லாமல் தமிழக எல்லையைத் தொட்டுவிட்டோம் என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் உறக்கம் கண்ணைக் கவ்வியது. அருகில் இருப்பவரின் குறட்டைத் தொந்தரவு இல்லாமல் ஆழ்ந்த உறக்கம். அதிகாலை பகலவனின் ஒளிக் கீற்று உடலில் மென்மையான சூட்டைப் பரப்பி எழுமின் என்றது . மெதுவாக கண்ணைக் கசக்கி விழித்து பார்வையை சாலையின் இருபக்கத்திலும் மேயவிட்டேன். வழக்கமான பொட்டல் காடு ஒன்று இரண்டு தூறல் விழுந்ததற்கான சுவடுகள் ஆங்காங்கே தென்பட்டன. ஊர் எல்லையில் செம்புடன் காலைக் கடனைக் கழிக்க மக்கள் சென்றுகொண்டிருந்தனர். நெல்லைச் சீமையைப் பேருந்து தொட்டது. மழை கொஞ்சம் மண்ணை நனைத்து ஊரெங்கும் மண்வாசனையை பரப்பி இருந்தது. வாசனையை நுகர்ந்தவனாக பேருந்தில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறினேன். தாமிரபரணி ஆற்றைக் கடக்கும் போது கண்ணோடு சேர்ந்து மனதும் குளிர்ந்தது. ஆனால் தாமிரபரணியை கங்கைகொண்டானில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதால் தண்ணிருக்காக மண்ணின் மைந்தன் லோல்படுவதை நினைக்கையில் மனக் குளிர்ச்சி வலியாக மாறியது. நெல்லை மாறி கொண்டிருக்கிறது பெரும்பாலான கடைகளில் தமிழ் பெயர்ப் பலகைகள் மறைந்து ஆங்கில பெயர்ப் பலகைகளாகிக் கொண்டிருக்கிறது. வயல்கள் எல்லாம் மிகப்பெரிய கட்டிடங்களாகிக் கொண்டிருக்கிறது. குளிக்கும் வாய்க்கால்கள் எல்லாம் கழிவுநீர் வடிகால்களாக மாறிக் கொண்டிருக்கிறது. கால ஓடத்தின் வேகத்தில் ஈடு கொடுக்க முடியாமல் நாம் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு எழுத்தையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் .

நம்முடைய ஆறுகளைத் தொலைக்காமல்
நம்முடைய வயல்களைத் தொலைக்காமல்
நம்முடைய மொழியைத் தொலைக்காமல்
நாம் முன்னேறவே முடியாதா. நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக மம்மியாகவும் டாடியாகவும் மாறித்தான் ஆக வேண்டு்மா. என்ற வேதனை மிகுந்த கேள்விகளுடன் என் வீட்டை அடைந்தேன் .